Tuesday, January 18, 2011

ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கவச உடை



தமிழர்களின் வீர விளையாட்டு, உலகமே வியந்து பார்க்கும் மிக ஆபத்தான விளையாட்டு, பொங்கல் வந்தாலே தினவெடுத்த தோள்கொண்ட  எம்மின 
வீரர்கள் புறப்பட்டு விடுவார்கள் காளைகளை அடக்க.

வீரம் செறிந்த தமிழர் வரலாற்றினை அறியாத மூடர்கள் தீர்ப்புரைக்கிறார்கள் இது காட்டுமிராண்டித்தனமென்று. காளையை அடக்குவது காட்டுமிராண்டித்தனம் என்றால், உணவுக்காக பிற உயிர்களை கொல்வது எந்த வகையில் நியாயம்? மீன் பிடிக்கக் கூடாது, கோழிக்கறி கூடாது, ஆட்டுக் கறி கூடாது, மாட்டுக் கறி கூடாது, இன்ன பிற புலால் வகை உணவுகள் கூடாது. இதை எல்லாம் மூக்கு முட்டத் தின்று கொண்டு தீர்ப்பு எழுதும் நாகரீக மனிதர்களைக் கேட்கிறேன் கசாப்புக் கடைகளை மூடிவிட்டு ஜல்லிக்கட்டை நிறுத்தச் சொல்லுங்கள். சரி நம் நோக்கம் அதுவல்ல. 

இது இன்று நேற்று நடப்பதல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் ஒப்பற்ற விளையாட்டு. இதன் பெருமைகள் நூறாயிரம் இருக்கும். அதை எல்லாம் நீங்கள் ஏற்கனவே தெரிந்திருப்பீர்கள். ஏனென்றால் இதைப்பற்றித் தெரியாதவர் தமிழர் அல்லர். 

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மஞ்சு விரட்டு நடக்கும் போதும் நான் வேதனைப் படுவதெல்லாம், இவ் விளையாட்டில் காயமடையும் வீரர்களும் வீரமரணம் அடையும் வீரர்களையும் பற்றியே. 

கிரிக்கெட் விளையாட்டிலும் உயிரிழப்புகள் நடந்துள்ளன, கால்பந்து விளையாட்டிலும் உயிரிழப்புகள் நடந்துள்ளன, உயிரழப்புகளை நியாயப் படுத்த நான் இதை எழுத வில்லை.   உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

விளையாட்டுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முக்கியம், அப்பொழுதுதான் அது விளையாட்டு, இல்லை என்றால் அது தண்டனை. ஒரு நாள் கூத்துக்காக இன்னுயிரை எல்லாம் விடக் கூடாது. கூரான கொம்புகள் கொண்ட காளைகளை அடக்க வெறும் கையும் பாதுகாப்பற்ற உடைகளையும் அணிந்து எம்மின வீரர்கள் பாயும் போது, ஒவ்வொரு முறையும் நான் செத்துச் செத்துப் பிழைக்கிறேன்.

கிரிக்கெட்டில் காலுக்குப் பேட் (Pad) , Kidney Cap, Helmet, Chest Pad, போன்ற பாதுகாப்பு அணிகலன்கள் உள்ளன, அது போல மாடு பிடி வீரர்களுக்கும் தகுந்த கவசங்கள் வேண்டும். வீரர்களது நெஞ்சு, வயிறு, கழுத்து, ஆண் குறி, இவைகளை காளைகளின் தாக்குதலில் இருந்து  பாதுகாக்க வேண்டும். இதை தகுதி வாய்ந்த வல்லுநர்கள் வடிவமைக்க வேண்டும். இந்த வகை உடைகளை அரசே வீரர்களுக்கு வழங்க வேண்டும். விபத்துக்களைத் தவிர்ப்பது முக்கியம். விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரண நிதியிலிருந்து லட்சம் லட்சமாகக் கொடுப்பதை விட இது சிறந்ததாகும் என நினைக்கிறேன். 

மேலும், இவ்வீரர்களுக்கு காப்புறுதி செய்து கொடுக்கலாம். விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கிருந்த தற்காலிகமான காப்புறுதித் திட்டம் போல. 

எத்தனை எத்தனை தனியார் நிறுவனங்கள் கோடி கோடியாக கிரிக்கெட்டுக்குக் கொட்டிக் கொடுக்கின்றன, ஆர்வலர்கள் அவர்களை அணுகி இந்த வகை உடைகளை இலவசமாகக்  கோரிப்பெறலாம்.
   
இதை ஏன் நான் சொல்கிறேன்?

ஏனென்றால் எந்தத் தமிழன் கயமடைந்தாலும் எனக்கும் வலிக்கும். உங்களுக்கு?

No comments:

Post a Comment