Saturday, January 22, 2011

வலைப்பதிவர்களே தமிழுக்குச் சேவை செய்தது போதும்! தமிழருக்குச் சேவை செய்ய வாருங்கள்!


கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தும் முன் தோன்றிய மூத்த குடி,  தான் குடியிருந்த அனைத்து இடங்களையும் இழந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் எதிர்ப்பின்றி சரணடைந்து ஓடி ஓடி களைத்து இப்போது வாழ்வதற்கே இடமில்லாமல் சொந்த மண்ணிலே தொலைந்து போய் நிற்கின்றான்.  இது எதோ ஈழத்தில் நடந்ததை நான் சொல்வதாக நினைத்து நீங்கள் பொருட் படுத்தாமற்  செல்ல வேண்டாம். 

சிந்து சமவெளி வரை வாடமேற்கில் பரவி இருந்த நம் இனம் ஆரியர் வருகையினால் அனைத்து வடபாதி இந்தியாவையும் வந்தேறிகளுக்கு விட்டு விட்டு அடிமை ஆகினர். மீதம் தெற்கில் இருந்த இனமும் இனக்கலப்பினால்  வெவ்வேறு மொழிக்குடும்பம் ஆகினர். முதலில் கன்னடம் பிரிந்தது, பிறகு தெலுங்கு பிரிந்தது, கடைசியாக மலையாளமும் பிரிந்தது. சரி இது பரிணாம வளர்ச்சி என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் பிரிந்த இந்த மொழியினர் பிரித்து வைத்த மொழியினரை தங்களது உறவினராகவும் தாய்த் தமிழை கேவலமாகவும் நினைக்கும் மன நிலைக்கு வந்து விட்டனர். 

ஒருமுறை  மலையாள மனோரமா ஆங்கில  year book இல் திராவிட மொழிகளில் மூத்த மொழி கன்னடமா இல்லை தமிழா என்று இன்னும் முடிவு செய்ய முடியாமல் உள்ளது என்பது போல்   எழுதி இருந்தனர். (அதற்காக அதைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டாம். ஓசியில் கிடைத்தால் படிக்கலாம்.)

தமிழன் என்று இருப்பவனது அடையாளங்களை பிற மொழியினரும் இனத்தினரும் ஒவ்வொன்றாகச் சிதைத்து வருகின்றனர். தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதி கொடுத்ததற்கு அனைத்து மொழிகளுக்கும் அத் தகுதியினை அளிக்க வகை செய்வது போல தகுதி வரம்பைக் குறைத்து விட்டனர். பதவி வெறி கொண்ட தமிழக அரசியல் வாதிகளைக் கொண்டு தமிழனின் அடையாளத்தை ஈழத்தில் அழித்து விட்டனர். இப்போது தமிழ் நாட்டிலும் அரங்கேற்றி வருகின்றனர். 

ஈழத்தில் செத்தவனுக்காக கலங்கினால் தேச விரோதி என்று கூப்பாடு போட்டு சிறையில் அடைக்கிறார்கள். சிறை சென்றவனைப் பார்க்கச் செல்பவனை தடா பொடா என்று காட்டுமிராண்டிச் சட்டங்களால் உள்ளே தள்ளுகிறார்கள். 

நீதி மன்றத்தில் வழக்கு நிற்காது என்று தெரிந்தே இந்த மாதிரியான பிரிவுகளில் கைது செய்கிறார்கள். சிறையில் பட்ட கஷ்டம் மிச்சம் என்பதற்காக. தமிழன் எங்கே சென்றாலும் கேவலம் அடைகிறான். போகாதே என்று சொன்னாலும் ஐயப்பன் மலைக்குச் சென்று சாகிறான். சாக வில்லை என்று சொன்னாலும் மலையாளிகளிடம் செருப்படி வாங்குகிறான்.

தமிழைக் காப்பாற்ற ஏராளமான வலைப்பதிவர்கள் தற்போது களம் இறங்கி இருக்கிறார்கள். மகிழ்ச்சி, ஆனால், இன்னும் பத்தாண்டுகளுக்குள் தமிழ் பேச யாரும் இருக்க மாட்டார்களோ என்ற எண்ணம் எனக்குள் குடைகிறது.  

ஏன் சொல்கிறேன்?

தினமும் தமிழ் நாட்டு மீனவர்கள் கடலில் கொல்லப்படுகிறார்கள். முதல்வரும் முரசொலிக்கு ஒன்றும் பிரதமருக்கு ஒன்றும் கடிதம் எழுதி விடுகிறார். சாகிறவன் செத்துக் கொண்டே இருக்கிறான். விரைவில் தமிழ் பேசும் மீனவர்கள் முற்றாக அழிக்கப் பட்டு விடுவார்கள். அல்லது வேறு வேலைக்குப் போய் விடுவார்கள். இவர்களைப் பற்றி எந்த அரசும் கவலை கொண்டதில்லை. அதே போல்தான் மீதமுள்ள தமிழனையும் கோழைகளாக்கி அழித்து விடுவார்கள். தன் இனம் சாகின்ற போது சொரனையே இல்லாமல் கிரிக்கட் பார்க்கும் கோழைகள். 

அய்யா நான் உணர்ந்து கொண்டதெல்லாம், தமிழைக் காப்பாற்றிய வரை உங்களது முயற்சி பாராட்டுக் குரியது. அதே போல தமிழனையும் காப்பாற்ற வாருங்கள். அனைவரும் எதோ ஒரு வகையில் இனத்தினைக் காப்போம், இழந்த பெருமையை மீட்டெடுப்போம். 

 நமக்குள் ஆயிரம் பேதங்கள் இருக்கலாம், போட்டிகள் இருக்கலாம், பொறாமைகள் இருக்கலாம், நாம் தான் இந்த உலகத்தில் இப்போது இருக்கும் தமிழர்கள், நாம் கூட இதைச் செய்ய வில்லை என்றால், முரீசியசில் அழிந்து போன டோடோ பறவையைப் போல நம் இனம் நம்முடனே அழிந்து விடும். நம் இனம் இந்த உலகம் உள்ள மட்டும் நிலைத்து இருக்க வேண்டும். வாருங்கள் ஒன்றாவோம். தமிழினத்தை ஆதரிப்போம் காப்போம். 

உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறுங்கள். சேர்ந்து செயல் படுவோம்.

No comments:

Post a Comment