Saturday, February 5, 2011

தமிழ் நாடு - தேர்தலுக்குப்பின் கூட்டணி மாற்றம் : சோதிடம்



விரைவில் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் ஆளும் கட்சி செய்யும், ஆட்சிக்கு வர எதிர்க்கட்சியும் என்ன வேண்டுமானாலும் செய்யும். 

சரி பல்லாக்குத் தூக்கும் கட்சி என்ன செய்யும்? இந்தக் கேள்வி எம்மைக் குடைந்ததால் நாமும் கருத்துக் கணிப்பு நடாத்திப் பார்த்தோம். அதில் சரியாக பதில் கிடைக்க வில்லை. எனவே ஒரு சோதிடரை அணுகினோம், அவர் சொன்னது வருமாறு,  "பகலில் சூரியன் தெரிவதாலும், இரவில் நட்சத்திரங்கள் தெரிவதாலும்,  திங்களுக்குப் பின்னால் செவ்வாய் வருவதனாலும், மேயிற்குப் பிறகு ஜூன் வருவதாலும்பல்லாக்குத் தூக்கும் கட்சியின் குறிக்கோள்மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுதல். மாநிலத்தில் தன் கட்சிக்காரர்களுக்கு தோதாக காண்ட்ராக்ட் வாங்கிக் கொடுப்பது, மாநிலக் கட்சி காவிக் கட்சியினை அண்டாமல் பார்த்துக் கொள்வது, போன்ற நாட்டு நலனுக்கான திட்டங்கள் இருக்கும் என்று யூகிக்கலாம்."
  
'சரி, யார் ஆட்சிக்கு வருவார்கள் ?' என்று கேட்கப் பட்டதற்கு, "அதிக இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சிக்கு வரும்," என்றார். 
'அது எந்தக் கட்சி?'  என்றதற்கு, "மக்களின் மனதில் இருப்பது தான்," என்றார். 

"மக்களின் மனதில் யார் இருக்கிறார் ?" என்றதற்கு 
"யாராய் இருந்தால் என்ன? ஈஸ்வரகங்கைச்  சீமையிலே சென்ற பாராளுமன்றத்தேர்தலில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியாதா?" என்றார். 
"அப்படி என்ன நடந்தது? " என்றதற்கு, "செத்தவன் பிழைத்தான், தோற்றவன் வென்றான். உடன்பாடு செய்தார்கள்,  கன்று அழைக்கும் வார்த்தையின் பொருளில் இருக்கும் கட்சித் தலைமைக்கு ஆதரவாக,  ரகசியம் சொல்லும் ஊர்க் கோவிலின் பெயரைக் கொண்ட மீசையில்லாத ஆண் ஆதரவு தருவார். வேறு  கட்சிக்குள் உள்குத்து நடக்கும் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் மோதிக்கொள்வார்கள். உளவுத்துறை புகுந்து விளையாடும். ஆட்சி பறிபோகலாம். புதிய ஆட்சி அமையலாம். எதோ ஒரு ஜால்ராவை வைத்து தவறான கூட்டணியில் இருந்து  விட்டோம் என்று அறிக்கை விட்டு ஊழலில் பங்கு கொடுத்த கட்சித் தலைமைக்கு எதிராக மேலிடக் கருத்துக்களைப் பரப்பி கூட்டணியில் இருந்து பிரிந்து புதிய கூட்டணியை அமைக்கலாம். அறிக்கை விட்ட முதல் ஜால்ராவுக்கு மாநில தலைவர் பதவி அளிக்கலாம். பிறகு வரப்போகும் ஊராட்சித் தேர்தலில் இரண்டு மாநகராட்சிகளைப் பெற்றுக் கொண்டு புதிய அத்தியாயத்தைத் தொடங்கலாம். வைகோவும் பாண்டியனும் நொந்து போகலாம். மார்க்சிஸ்டுகள் புதிய ஆட்சியால் பாதிக்கப் பட்ட அரசு ஊழியர்களுக்காக உண்டியல் குலுக்கலாம். இதெல்லாம் நடக்கலாம் நடக்காமலும் போகலாம். அது அது,அந்த அந்த தசா புத்திகளைப் பொறுத்தது. ", என்றார். 

சோதிடத்தை நம்பலாமா? வேண்டாமா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment