Thursday, February 24, 2011

தமிழக சட்டமன்றத் தொகுதிகள் ஏலத்துக்கு: கார்ப்போரேட் நிறுவனங்கள் கவனத்துக்கு

தமிழக சட்டமன்றத் தொகுதிகள் ஏலத்துக்கு

கட்சிமாறிகள், கட்சி தாவிகள், கொள்கை மறந்தவர்கள், பதவி வெறியர்கள், காட்டிக் கொடுப்போர், போட்டுக் கொடுப்போர், நம்பிக்கைத் துரோகிகள், எதிரியிடம் சரணடைவோர், இன்னபிற எல்லாம் நாம் MLA ஆகவும், MP ஆகவும் பார்த்திருக்கிறோம். எந்தக் கட்சியும் நம்பும்படி இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.

முன்பு திகவில் இருந்து திமுகவுக்கு மாறினார்கள், திமுகவிலிருந்து அண்ணா திமுகவுக்கு மாறினார்கள், அதெல்லாம் ஓரளவுக்குக் கொள்கை என்று எடுத்துக் கொள்ளலாம். அது ஜனநாயகக் காலம். பிற்பாடு வந்தது பாருங்கள் பணநாயகக் காலம். எவன் எந்தக் கட்சியில் இருக்கிறான் என்று நமக்கும் தெரிவதில்லை, அவனுக்கும் தெரிவதில்லை.

எது ஆளுங்கட்சியோ அதற்குத் தாவும் மக்கள் பிரதிநிதிகள். எல்லாக் கட்சியிலும் இருக்கிறார்கள். யாரும் விதிவிலக்கில்லை. திமுகவிலிருந்து அண்ணா திமுகவுக்கு, அண்ணா திமுகவிலிருந்து திமுகவுக்கு, மதிமுக விலிருந்து திமுகவுக்கு, கம்யூனிஸ்டிலிருந்து திமுகவுக்கு, அண்ணா திமுகவிலிருந்து காங்கிரசுக்கு, இதற்கெல்லாம் எடுத்துக் காட்டு கேட்காதீர்கள். எல்லாம் உங்களுக்குத் தெரியும். பேசிக்கொண்டு போனால் வாய் வலிக்கும் தட்டச்சு செய்தால் கைவலிக்கும்.

உச்சி கவுடரில் ஆரம்பித்து, ஜென்னிபர் சந்திரன், செல்வ கணபதி, சேடப்பட்டி முத்தையா, கம்பம் ராமகிருஷ்ணன், செஞ்சி ராமச்சந்திரன், எல் கணேசன், திருப்பூர் கோவிந்தசாமி,பேராசிரியர் தீரன், எஸ் வி சேகர் இன்னும் ஏராளமானோர்.

நிற்க, இவர்கள் எல்லாம் கொள்கையின் அடிப்படையிலா மாறினார்கள் என்று நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை பணம். பணம் தான் அய்யா, பணம் தான், எவ்வளவு கொள்ளை அடித்தான் என்று செய்திகளில் பாருங்கள். அதைத் திரும்பச் சொல்லவேண்டாம். தமிழன் பிணத்தின் மேல் உட்கார்ந்து பணம் எண்ணும் ரத்தக் காட்டேரிகள்.
அண்ணா, ஜீவா, ஆசைத்தம்பி, பட்டுக் கோட்டை அழகிரி...என்று வளர்ந்த திராவிடப் பரம்பரையைப் பாருங்கள். இன்றோ பொருக்கி, போக்கிரி, விலைமகள், நடன மங்கை, இன்னும் சொல்லக் கூசும் செயல் செய்யும் தலைவர்கள். அதனால் தான் சொல்கிறேன், கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். கார்ப்பரேட் நிறுவனங்களை அழைத்து தமிழக சட்டமன்றத் தொகுதிகளை ஏலம் எடுக்கச் சொல்லுங்கள். வரும் பணத்தைத் தொகுதி மக்களுக்குப் பிரித்துக் கொடுங்கள். அதிகத் தொகுதியை ஏலம் எடுக்கும் நிறுவனத்திடம் ஆட்சியைக் கொடுங்கள். ஏனெறால் இந்த MP,MLA அனைவரும் காசு வாங்கி கட்சிமாறும் பச்சோந்திகளே.
முந்தைய பதிவில் சொல்லியவாறு தமிழ்நாட்டுக்கு விலை வெறும் ரூ 1950 கோடி தான். ஒரு கிரிக்கெட் கிளப்பின் விலைகூட இல்லை . எவ்வளவு சல்லிசு பார்த்தீர்களா? இந்தக் கட்சிகளும் தொங்கு சட்டமன்றம் வந்தால் விலை பேசத்தான் செய்யும். டபுள் ஏஜண்டுகள் நிறைந்திருக்கும் கூட்டணிதான் பாருங்கள்.

எவனிடம் கொள்கை இருக்கிறது? பணம் ஒன்றே குறி.
எனவே தான் கெஞ்சிக் கேட்கிறோம்,
டாட்டாக்களே, பிர்லாக்களே, பஜாஜ்களே, கோத்தாரிகளே, சேட்டுகளே, பார்சிகளே, பணம் படைத்த பரதேசிகளே வாருங்கள் தமிழ்நாடு எண்ணும் சத்திரத்துக்குத் தாள் போடுங்கள்.

உங்களிடம் பணத்தை வாங்கி கட்சிக்காரங்கள், மற்ற கட்சிக் காரங்களை வாங்குவாங்கள். அதை என் நீங்களே வாங்கக் கூடாது?

இந்திய நிறுவனங்கள் வாங்க வில்லை என்றால், Fortune 500 கம்பெனிகளை அழைத்து உலக டெண்டர் விட வேண்டி வரும்.
பின்கண்டவைகள் உலகின் முதல் பத்துக் கம்பெனிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவைகளிடம் தமிழ் நாட்டை ஒப்படைப்பு செய்ய எங்களுக்கு ஒன்றும் கூச்சம் இல்லை. கிழக்கு இந்தியக் கம்பெனியிடம் இந்தியாவே சரண் அடைந்து இருந்தது என்பதை நாம் அறிவோமல்லவா?

1 Wal-Mart Stores, United States, Retail
2 Royal Dutch Shell, Netherlands, Petroleum
3 Exxon Mobil, United States, Petroleum
4 BP, United Kingdom, Petroleum
5 Toyota Motor, Japan, Automobiles
6 Japan Post Holdings, Japan, Diversified
7 Sinopec, China, Petroleum
8 State Grid, China, Power
9 AXA, France, Insurance
10 China National Petroleum, China, Petroleum

1 comment: