Saturday, February 12, 2011

ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு ஆறுதல்




கூட்டணிப் பேச்சு வார்த்தையில் தன்னைச் சேர்க்க வில்லை என்று இளங்கோவன் வருத்தப் பட்டிருக்கிறார். படித்ததும் கண்ணீரை அடக்க முடியவில்லை. பெரியாரின் பேரன், ஈவிகே சம்பத்தின் மகன் இப்படிப் புறக்கணிக்கப் படுவதை நினைத்தால் எந்த சுயமரியாதை கொண்ட தமிழனும், மன்னிக்கவும் இந்தியனும் கண்ணீர் விட்டுத்தான் ஆக வேண்டும். "கடவுள் ஒழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும் , காங்கிரஸ் ஒழிய வேண்டும்" என்று பெரியார் சொன்னார். அந்தக் காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வாய் கிழியப் பேசும் இளங்கோவனுக்கு பேச்சு வார்த்தை நடத்த அனுமதி இல்லை என்றால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது சோனியாவைக் கண்டபடி திட்டினார். அதற்கெல்லாம் இளங்கோவன் மட்டுமே சரியான பதிலடி தந்தார். ஆனால் ஜெயலலிதாவை ஆதரித்தவர்கள் எல்லாம் இப்போது திமுகவை ஆதரிக்கிறார்கள். அப்போதும் ஆளுங்கட்சியை எதிர்த்த இளங்கோவன் இப்போதும் ஆளுங்கட்சியை  எதிர்க்கிறார். இதற்காக நீங்கள் இவரை ஒரு லூசு என்று நினைத்துவிடக் கூடாது. பெரிய அறிவாளியாக்கும். இவர் ஆதரித்தார் என்பதற்காக எஸ் ஆர் பாலசுப்ரமணியம் , யசோதா ஆகியோருக்கும் கூட பேச்சு வார்த்தைக் குழுவில் இடமில்லாமல் போனது. ஐயோ பாவம். 

காங்கிரஸ் கட்சி இவரை எவ்வளவு அவமானம் செய்தாலும்  கூட தாங்கிக் கொள்கிறார், ரொம்ப நல்லவர்... கொள்கையில் உறுதியாக நிற்கிறார்.  மெய் சிலிர்க்கிறது. காங்கிரசை தமிழ் நாட்டு ஆட்சியில் பங்கு கொள்ள வைப்பது என்பது இவர் கொள்கை, (தனியாக ஆட்சியமைக்க இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம். ----.....கனவுகளுக்குத் தடையில்லை.). 

அய்யா இளங்கோவரே சுய மரியாதை பேசிய குடும்பம் உங்களுடையது. ஆனால் அதை எல்லாம் உங்கள்  தந்தை மறந்துவிட்டு நேரு குடும்பத்துக்கு ஜால்றாபோட்டது போலவே நீங்களும் செய்கிறீர்களே. எதுக்குக் கஷ்டப்பட்டு ஊர் ஊராப் போய் ஆளுங்கட்சியைத் திட்டி காங்கிரசை வளர்க்கணும்வளர்த்து, வளர்த்து நேரு குடும்பத்துக்கு சொத்து சேர்க்கணும்? "ஆத்தைக் கடந்த பின் நீ யாரோ நான் யாரோங்கறது" தான் அரசியல் தத்துவம். அப்படி இருக்க  ஏன் போய் நேரு குடும்பத்துக்கு வால் பிடிக்கிறீங்க? உங்களை அவமானப் படுத்திய காங்கிரசுக்கு நீங்கள் சரியான பாடம் கற்பிக்கனும். அவர்கள் உங்களைப் புறக்கணித்து வேட்பாளர்களை அறிவிச்சா, அந்த வேட்பாளர்களைப் பற்றிய உண்மைகளைப் நீங்க புட்டுப் புட்டு வைக்கணும். அவங்களெல்லாம் உங்களை மாதிரி கட்சி வளர்க்க சிரமப் படாமல் எம் எல் ஏ ஆக நீங்க விட்டுறலாமா? நீங்க இதைச் செய்தீங்கன்னு சொன்னாத்தான் உங்களை தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர் ஆக்குவாங்க. நீங்களும் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆகலாம். இல்லாங்காட்டி இந்தியப் பிரதமர்கூட ஆகலாம். அதென்ன ராகுல் காந்தி என்ன பட்டத்து இளவரசனா? நீங்க சும்மா இருந்தீங்கன்னா எப்படி? உங்களுக்கும் பதவி வேண்டாமா? ஒரு நியாயமான காங்கிரஸ்காரன் பிரதமர் ஆகிறதை நாங்க பாக்க வேண்டாமா

என்னவோ போங்க சொல்றதைச் சொல்லீட்டேன். அப்புறம்  உங்க  பாடு.   

No comments:

Post a Comment